மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் வேட்பாளர்களை ஆதரித்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் சந்திரா பாபு நாயுடு அடுத்து பிரதமராக வரலாம் என மறைமுகமாக பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, "சந்திரபாபு நாயுடுவின் தலைமையை நாடு எதிர்நோக்கியுள்ளது. நாடு மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. எனவே சந்திரபாபு நாயுடு இந்த சவாலை ஏற்க வேண்டும். சந்திரபாபு நாயுடு ஏன் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கக் கூடாது? மோடியை யார் எதிர்ப்பார்கள் என விவாதம் நடத்தப்படுகிறது. இந்த சவாலை ஏற்கக் கூடிய நபர், சந்திரபாபு நாயுடுதான். மோடியை எதிர்க்க அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைக்க வேண்டும். தெலுங்குதேசம் கட்சி சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் வெல்லும் எனவும், 20 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறும்" என கூறினார். இதன்மூலம் காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் சந்திரபாபு நாய்டுவாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.