கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவி வகித்து வந்த நிலையில் நேற்றுடன் (நவம்பர் 10ஆம் தேதி) ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டதன் பேரில், உச்சநீதிமன்றத்தின் 51 வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று (நவம்பர் 11ஆம் தேதி) பதவியேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் சஞ்சீவ் கன்னா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் விழா தற்பொழுது நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நீதிபதி சஞ்சீவ் கன்னா, அரசியல் கட்சிகள் தேர்தல்பத்திரம் மூலம் நிதி பெற்றது தொடர்பாக வழக்கு; சட்டப்பிரிவு 370 உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இன்று பதவி ஏற்கும் நீதிபதி சஞ்சீவ் கன்னா அடுத்த ஆண்டு மே 13ஆம் தேதி வரை மொத்தம் 6 மாதங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.