நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியால் மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று மதியம் அறிவிக்கப்பட்டன. தேர்வெழுதிய 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்களில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 598 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 50 இடங்களில் ஒரேயொரு தமிழக மாணவி மட்டுமே இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள துவாரகா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர், நேற்று மாலை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரத்தவெள்ளத்தில் மிதந்த இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட இளைஞர் பிரனவ் மகேந்திரதா என்பதும், 2016ஆம் ஆண்டு +2 முடித்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றுவந்ததும் தெரியவந்துள்ளது. தனது அறையில் துப்பட்டா ஒன்றைக் கட்டி தூக்கிடுவதற்காக தயார் செய்த பிரனவ், பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டு 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறப்பதற்கு முன்பாக எழுதிய தற்கொலைக் கடிதத்தில், தனது நீட் தேர்வு முடிவு குறித்து பெற்றோரிடம் பொய் கூறியதாகவும் எழுதியுள்ளார். ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த பிரதீபா எனும் மாணவி நீட் தோல்வியால் தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.