
மூன்று மாதங்களில் காணாமல்போன 76 குழந்தைகளைக் கண்டுபிடித்த பெண் காவலருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது டெல்லி அரசு.
டெல்லியில் அண்மைக்காலமாக குழந்தை காணாமல் போவது தொடர்பான வழக்குகள் அதிகரித்த நிலையில், குழந்தைகளைக் கண்டறியும் பணியை விரைவுபடுத்தும் நோக்கில், கான்ஸ்டபிள்கள் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள்கள் ஒரு வருடத்துக்குள் காணாமல்போன 50 குழந்தைகளைக் கண்டுபிடித்தால் பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி காணாமல்போன குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த டெல்லியின் சமாய்பூர் பதலி காவல்நிலைய பெண் தலைமை கான்ஸ்டபிள் சீமா டாக்கா குழந்தைகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளார். அதன் விளைவாக மூன்று மாதங்களில், டெல்லி மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த காணாமல்போன 76 குழந்தைகளைக் கண்டுபிடித்துள்ளார். இதில் 56 குழந்தைகள் 7 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள். இந்நிலையில், சீமா டாக்காவின் பணியைப் பாராட்டும் விதமாக, உறுதியளித்தபடி அவருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது டெல்லி காவல்துறை. இதனிடையே காவலரின் இந்த செயலுக்கு குழந்தைகளைத் திரும்பப் பெற்ற பெற்றோர் உட்பட பொதுமக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.