இராமாயணத்தின்படி, அனுமார் இராமரின் தீவிர பக்தர். கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்க இராமருக்கு உதவியவர். இராம பக்தர்கள், அனுமாரையும் வழிபட்டு வருகிறார்கள். அனுமார் கர்நாடக மாநிலம் ஹம்பி அருகிலுள்ள அஞ்சனாத்ரியில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இந்தநிலையில், திருப்பதி தேவஸ்தானம், அனுமார் ஆந்திராவில் பிறந்ததாக கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம், திருப்பதியில் உள்ள ஏழுமலைகளில் ஒன்றில்தான் அனுமார் பிறந்தார் என்றும், இதை நிரூபிக்கும் வகையில் யுகாதி வருட பிறப்பான இன்று (13.04.2021), புத்தகம் ஒன்றை வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கர்நாடக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததோடு, திருப்தி தேவஸ்தானம் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், ஆய்வாளர்கள் மத தலைவர்களோடு விவாதிக்க வேண்டும் என கூறியுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த சில ஆய்வாளர்கள், அனுமார் பிறந்தது கர்நாடகத்தில்தான் எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அனுமார் பிறந்ததாக கருதப்படும் பகுதியில், மனிதர்களுக்கு வால் இருப்பது போன்ற குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. எனவே வானரர்கள் என்பது வாலை உடைய மனித இனமாக இருக்கலாம். அவர்கள் இராமருக்கு உதவியிருக்கலாம் என்றும், மேலும் அங்கு பல அனுமார் சிற்பங்கள், கோவில்கள் உள்ளன. திருமலையில் அனுமார் சிற்பங்கள் கிடைக்கவில்லையே என கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே இராமர் பிறந்த இடம் குறித்து நேபாள பிரதமர் பேசியது சர்ச்சையான நிலையில், அனுமார் பிறந்த இடம் குறித்தும் சர்ச்சை கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.