டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.
இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதனிடையே, டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் “எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக எனது நெருங்கிய உதவியாளர் மூலம் பா.ஜ.க. என்னை அணுகியது. நான் பா.ஜ.க.வில் சேரவில்லை என்றால் அடுத்த ஒரு மாதத்தில் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன் என மிரட்டல் விடுக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் மேலும் 4 ஆம் ஆத்மி தலைவர்களான சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சாட் ஆகியோரை கைது செய்வார்கள்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க மறுப்பு தெரிவித்தது. அத்தோடு டெல்லி அமைச்சரான அதிஷிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார் அளித்தது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து டெல்லி அமைச்சர் அதிஷி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் அதிஷி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “ஏப்ரல் 4 அன்று, எனது செய்தியாளர் சந்திப்பில் ஒன்றின் மீது பா.ஜ.க புகார் அளித்தது. ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 11:15 மணிக்கு, அதிஷிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்தி சேனல்கள் ஒளிபரப்பின. ஆனால், செய்தி வந்து அடுத்த அரை மணி நேரத்திற்குள் எனக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அறிவிப்பு வந்துவிட்டது. இதன் பொருள் என்னவென்றால், பாஜக முதலில் தேர்தல் ஆணைய அறிவிப்பை ஊடகங்களில் வெளியிடுகிறது. அதன் பிறகு, எனக்கு நோட்டீஸ் கிடைக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா என்பதுதான் எனது கேள்வி.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட போதும், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட பிறகும், தேர்தல் ஆணையம் ஏன் மத்திய அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை?. இன்று நீங்கள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தவில்லை என்றால், வரலாறு தேர்தல் ஆணையத்தை தவறாக நினைவில் வைத்திருக்கும். தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பா?. தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு நான் பதிலளிப்பேன். இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதில் எதிர்பார்க்கப்படும் நடுநிலை மற்றும் கட்சி சார்பற்ற தன்மையை ஆணையத்திற்கு நினைவூட்டுகிறேன்” என்று கூறினார்.