சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன. இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியின், இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியில் வாழ்ந்து வரும் இந்து ஒருவர் கலவரத்தின் போது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

டெல்லியின் சிவ விஹார் பகுதியில் ராம்சேவக் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இஸ்லாமியர்கள் நிறைந்த அந்த பகுதியில் கலவரத்தின்போது நிகழ்ந்தவை குறித்து பேசிய அவர், "நான் கடந்த 35 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறேன். இந்த சுற்றுவட்டாரத்தில் ஒன்று அல்லது இரண்டு வீடுகளே இந்துக்களுடையது. ஆனால் நாங்கள் ஒருபோதும் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளவில்லை. வன்முறை நேரத்தில், என் வீட்டின் அருகே வசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் என்னிடம் வந்து, 'கவலைப்படாமல் நன்றாக தூங்குங்கள், இங்கு எந்த பிரச்சைனையும் வராது' என்று எனக்கு உறுதியளித்தனர்" என தெரிவித்துள்ளார். நாட்டையே உலுக்கிய கலவரத்தின் போதும் மதங்களை கடந்த இந்த மனிதம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.