அண்மையில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நுபுர் சர்மா மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில், நாடு முழுவதும் தனக்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா மனுத்தாக்கல் செய்திருந்தார். நுபுர் சர்மா மீது பல்வேறு புகார்கள் பதியப்பட்டுள்ள நிலையில் நுபுர் சர்மாவின் வாதங்களும், வார்த்தைகளும் நீதிமன்றத்தில் நம்பிக்கைக்கு உரியதாக இல்லாததால் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், நுபுர் சர்மாவின் வார்த்தை நாட்டை தீக்கரையாகிவிட்டதாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.
உதய்ப்பூரில் நடந்த படுகொலைக்கு இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களே காரணம் என்றும், ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக இருப்பதாலேயே எதுவும் பேசி விட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்து அதன் மீதான காவல்துறையின் நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், நுபுர் சர்மா தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நுபுர் சர்மா காரணமல்ல, பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக, ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் எனக் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் வயநாட்டில் தனது அலுவலகம் தாக்கப்பட்டது துரதிஷ்டவசமானது. வன்முறை ஒருபோதும் பிரச்சனையை தீர்க்காது எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.