ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கட்டண உயர்வை திரும்ப பெறுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், ஆடை அணிவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போதும் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாணவர்களின் பிரதிகளை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதனையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கல்வி கட்டணம், விடுதி கட்டண உயர்வை திரும்பப் பெறப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் கொண்டு வரவும் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. எனவே போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.