டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலீஸார் வன்முறையை கலைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவாளர்களுக்கு இடையே நேற்று வடகிழக்கு டெல்லியில் மோதல் ஏற்பட்டு மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை ஒரு காவலர் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150- க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதன் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கலவரங்கள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதுடன், பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். மேலும், கலவரம் நடந்த இடத்தில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர் ஒருவர் துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில், டெல்லியின் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட வன்முறை தொடர்பாக காவல்துறை 11 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.