
தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மத்திய அரசுக்கு துவக்கம் முதலே நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
முதல் நாள் விசாரணையில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்திற்கும் தேர்தல் ஆணையர் நியமனத்திற்கும் எந்த மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில் 8 தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமித்தது எப்படி என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டது.
வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே தேர்தல் ஆணையராக பஞ்சாபை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது நியமனம் குறித்தும் நேற்று கேள்விகள் எழுப்பப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற சில தினங்களில் எப்படி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். மேலும், அருண் கோயல் நியமனம் ஏன் அவசர அவசரமாக நடைபெற்றது என்றும், புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியது,
அருண் கோயல் நியமிக்கப்பட்டதிற்கு எந்த மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது குறித்தான கோப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கோப்புகள் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி ஜோசப், தேர்தல் ஆணையராக பரீசிலிக்கப்பட்ட 5 அதிகாரிகளில் அருண் கோயல் தான் மிக இளையவர். அவரைத் தேர்வு செய்தது எப்படி என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.