இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. இரண்டாவது அலையின்போது கேரளாவிலும் தொற்று பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. இதனையடுத்து, அம்மாநிலத்தில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மூன்றடுக்கு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக அங்கு கரோனா பாதிப்பு படிபடியாக குறைந்து 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்தது. இன்று 7,719 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து வரும் 16 ஆம் தேதி முதல் ஊரடங்கு திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "யுக்தி ஜூன் 16 க்கு பிறகு மாறும். கரோனா நிலையை பொறுத்து பகுதி வாரியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இது உள்ளாட்சி அமைப்புகளால் அமல்படுத்தப்படும். மேலும் இதுதொடர்பான விவரங்கள் நாளை அறிவிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.