டெல்லியில் தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது வரை டெல்லியில்தான் அதிக ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் டெல்லியில் தற்போது அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளுக்கு ஒமிக்ரான் காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், "கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவை எந்த வகையான கரோனா பாதிப்புகள் எனத் தெரியவில்லை. எனவே அதை உறுதிப்படுத்த, கரோனா உறுதியான அனைவரின் மாதிரிகளையும் மரபணு வரிசை முறை சோதனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் கரோனா பாதிப்புகள் காரணமாகவும், ஒமிக்ரான் அச்சம் காரணமாகவும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த டெல்லியின் பேரிடர் மேலாண்மை வாரியம் தடை விதித்துள்ளது.