
ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா, சீனா இடையே பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில், இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சீனா இப்பகுதியில் ஆயுத பலத்தை அதிகரித்து வருவதால், இந்தியாவும் பதிலடி தரும் வகையில் ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்களை வாங்கப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதுள்ள 59 மிக்-29 விமானங்களை மேம்படுத்துவதோடு, 12 சுகொய்-30 எம்.கே.ஐ விமானங்கள் மற்றும் 21 மிக்-29 விமானங்கள் உட்பட ரஷ்யாவிலிருந்து 33 புதிய போர் விமானங்களை இதன்மூலம் இந்தியா வாங்க உள்ளது. மேலும், 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையிலான ஏவுகணைகளும் வாங்கப்பட்ட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைதவிர சுமார் 38,900 கோடி ரூபாய் மதிப்பில் பினாகா ராக்கெட் ஏவுகணைகள், பி.எம்.பி போர் வாகன மேம்பாடுகள் மற்றும் இராணுவத்திற்கான மென்பொருள் வரையறுக்கப்பட்ட ரேடியோக்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.