உத்தரப் பிரதேச மாநிலம், பிரதாப்கர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இவரை, 22 வயதான அனில் குப்தா என்பவர், கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்தார். அதன் பின்னர், அந்த சிறுமியின் கைகளையும், வாயையும் கயிற்றால் கட்டி, அங்குள்ள ஒரு வயலில் சிறுமியை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் போது, அனில் குப்தாவை போலீசார் கைது செய்ய முற்படும் போது அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு போலீசாரை சுட முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட போலீசார், அனில் குப்தாவை வளைத்து பிடித்து கைது செய்தனர். அனில் குப்தா மீது, பாரதிய நியாய சன்ஹிதா, வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டியலின சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமியை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிறுமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பட்டியலின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.