‘பாரத் மாதா கீ ஜே’ என்று சொல்லாதவர்கள் பாகிஸ்தானிகளாகத் தான் இருக்கமுடியும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லயா மாவட்டத்தில் உள்ள பரிரியாவில் பா.ஜ.க. சார்பிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், ‘பாரத் மாதா கீ கே மற்றும் வந்தே மாதரம் என்று சொல்லாதவர்கள் பாகிஸ்தானியர்களாக இருக்கவேண்டும். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட வேண்டும். தாய் நாட்டிற்கு தாய்க்குக் கொடுக்கும் மரியாதையைக் கொடுக்காதவர்களின் தேசபக்தி சந்தேகத்திற்குரியது. பாரத் மாதா கீ ஜே மற்றும் வந்தே மாதரம் என்று சொல்ல மறுப்பவர்களது அரசியல் பிரவேச உரிமையைப் பறிக்கவேண்டும்’ என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சுரேந்திர சிங், வரும் 2024க்குள் இந்தியா இந்து நாடாக மாற்றப்படும் என பேசியது சர்ச்சைக்குள்ளானது. மேலும், மணல் திருடும்போது காவலர்கள் உங்களைப் பிடித்தால் அவர்கள் கன்னத்தில் இரண்டு முறை அறையவேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார்.