மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதால், பலர் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த விபத்துகளில் பலத்த காயங்களுடன் உயிர் தப்புவோரும் உண்டு, உயிரிழப்பவர்களும் உண்டு. கடந்த சில வருடங்களாக மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதை தடுக்க மஹாராஷ்ட்ரா அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. அது என்ன திட்டம் என்றால்? மதுவகைகளை வீட்டிற்கே ஹோம் டெலிவரி செய்யும்
திட்டம்தான். இத்திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முதலில் கொண்டு வரப்போகும் அரசு மஹாராஷ்ட்ரா அரசுதான் என்று அம்மாநில காலால் வரித்துறை அமைச்சர்
சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆங்கில நாளேட்டு ஒன்றில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே விபத்துக்களைக் குறைப்பதுதான். இருசக்கர, நான்கு சக்கர வாகனம் இயக்குபவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதால் விபத்தில் சிக்குகிறார்கள். மதுவகைகள் வீட்டுக்கே வந்தால், குடித்துவிட்டு வாகனம் இயக்குவது குறையும். இதன்மூலம் விபத்துக்களைக் குறைக்கலாம். ஆன்லைனில் காய்கறிகள், மளிகைபொருட்களை ஆர்டர் செய்வதுபோல், மதுவகைகளையும் ஆர்டர் செய்து மக்கள் பெற முடியும். ஆனால், மதுவகைகளை ஆர்டர் செய்யும் மக்களுக்குக் கண்டிப்பாக ஆதார் கார்டு இருக்க வேண்டும்” என்றார். இதனை தொடர்ந்து இந்த புதிய திட்டத்திற்கு கடுமையான விமர்சனம், கடுமையான எதிர்ப்புகள் வந்தன.
இந்நிலையில் மஹாராஷ்ட்ரா முதலமைச்சர் இத்திட்டத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார். ”மதுபானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை தற்போதைக்கு அனுமதிக்கப்போவதில்லை, அதேபோல எதிர்காலத்திலும் கொண்டுவரப்படாது” பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.