இஸ்ரோ சார்பில் செயல்படுத்தப்படும் ககன்யான் திட்ட சோதனை ஓட்டத்திற்கான தேதியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.
இதுவரையில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வகையில் இந்தச் சாதனையைப் படைக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கடந்த 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும் ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் மாடுலை விண்ணில் பறக்கவிட்டு மீண்டும் பூமியில் தரையிறக்கும் முயற்சியை மேற்கொள்ள இருப்பதாக சோம்நாத் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் இத்திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.