இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்குப் பரவலான அளவில் செலுத்தப்பட்டுவருகின்றன. அதேநேரத்தில் ஏற்கனவே தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு மூன்றாவதாக ஒரு டோஸ் (பூஸ்டர் டோஸ்) செலுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்துவருகிறது.
ஐ.சி.எம்.ஆரின் தலைமை இயக்குநர் டாக்டர் பால்ராம் பார்கவா, கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்துவது என்பது விஞ்ஞான சிந்தனை கட்டத்தில் உள்ளது என தெரிவித்திருந்தார். மேலும் அண்மையில் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, "காலப்போக்கில் நோய் எதிர்ப்பு சக்தி குறையுமென்பதால், நமக்குப் பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம். உருவாகிவரும் மரபணு மாற்றமடைந்த கரோனாக்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும் வகையில் பூஸ்டர் டோஸ் வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். பூஸ்டர் டோஸ்கள் ஏற்கனவே சோதனையில் இருக்கிறது" என கூறியிருந்தார்.
இதனால் கோவிஷீல்ட் செலுத்திக்கொண்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் (பூஸ்டர் ஷாட்) தேவையா என்பது குறித்தும், அவர்களுக்கு மூன்றாவது டோஸ் செலுத்தப்படுமா என்பது குறித்தும் சந்தேகம் எழுந்தன. இந்தநிலையில், உலக சுகாதார நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்காக வழங்கியுள்ள இடைக்கால பரிந்துரையில் "இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு, மேலும் டோஸ்கள் தேவை என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை" என கூறியுள்ளது.