![Randeep Guleria,](http://image.nakkheeran.in/cdn/farfuture/0xa9rRhY1zPFuXYaqNhp6Fm8FqFxYqkEDf1or0MmxH0/1609392959/sites/default/files/inline-images/aimms-im.jpg)
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து தயாரித்த தடுப்பூசிக்கு இங்கிலாந்து நேற்று அனுமதி வழங்கியது. இங்கிலாந்தில் அனுமதியளிக்கப்பட்ட அந்த தடுப்பூசியை, இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் இந்தியாவின் சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு அனுமதிகேட்டு ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், சில நாட்களுக்குள் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரன்தீப் குலேரியா, "அஸ்ட்ராஜெனெகா அதன் தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒழுங்குமுறை ஆணையங்களிடம் ஒப்புதல் பெற்றதுள்ளது மிகவும் நல்ல செய்தி. அவர்களிடம் வலுவான தரவு உள்ளது, இந்தியாவில் அதே தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) உருவாக்கி வருகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளுக்கும் பெரிய முன்னேற்றமாகும். இந்த தடுப்பூசியை இரண்டு முதல் எட்டு டிகிரி சென்டிகிரேடில் சேமிக்க முடியும். எனவே சேமித்து கொண்டு செல்வது எளிதாக இருக்கும். மைனஸ் 70 டிகிரி சென்டிகிரேட்டில் சேமிக்கப்படும் ‘ஃபைசர்’ தடுப்பூசிக்குத் தேவைப்படுவதை விட எளிமையான குளிர்சாதன பெட்டியைப் பயன்படுத்தி சேமித்து வைக்க முடியும்.
"எங்கள் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துகிறோம். இதே தளத்தைப் பயன்படுத்தி கரோனா தடுப்பூசிகளை 2 முதல் 8 டிகிரி சென்டிகிரேடில் சேமித்து வைக்க முடியும். இப்போது, எங்களிடம் ஒரு தரவு உள்ளது. மேலும் இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்திடம் தரவுகள் முன்வைக்கப்பட்டதும் சில நாட்களில் தடுப்பூசிக்கு அனுமதி பெற்றுவிடலாம் என நினைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.