அரசு துறை நிறுவனமாக இதுவரை இருந்துவந்த ஏர் இந்தியா விமான போக்குவரத்தை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை முடிவு செய்து, அதற்கான ஏலத்தொகையைக் கோரியிருந்தது. இந்த ஏலத்தில் பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்திருந்த நிலையில், டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியாவை விற்பதற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், டாடா குழுமத்துக்கும், ஏர் இந்தியாவுக்கும் இடையேயான வரலாறு என்பது மிக நீண்டது.
இந்தியாவின் முதல் விமான நிறுவனமான ஏர் இந்தியாவுக்கும், டாடா குழுமத்துக்கும் இடையேயான தொடர்பு 1932ஆம் ஆண்டில் இருந்து தொடங்கியது. டாடா ஏர் சர்வீஸ் என்ற பெயரில் 1932ஆம் ஆண்டு விமானப் போக்குவரத்தை தொடங்கி, அந்த முதல் விமான பயணத்தை அந்தக் குழுமத்தின் தலைவர் ஜே.ஆர்.டி. டாடா தனது கைப்படவே விமானத்தை ஓட்டி தொடங்கிவைத்தார். முதல் பயணமாக அவர் கராச்சியில் இருந்து மும்பை வந்தடைந்தார். உலகப் போருக்குப் பின்னர் விமான நிறுவனத்தின் பெயரை டாடா ஏர் இந்தியா என்று மாற்றினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1948ஆம் ஆண்டு ஏர் இந்தியாவின் 49 சதவீத பங்குகளை இந்திய அரசு வாங்கியது. 1953ஆம் ஆண்டு ஏர் இந்தியாவின் முழு பங்கையும் இந்திய அரசு கைப்பற்றியது. இந்திய அரசு பங்குகளை வாங்கிக்கொண்டாலும், அதன் தலைவராக சில ஆண்டுகாலம் டாடாவே தொடர்ந்து இருந்தார். இந்நிலையில், 67 வருடத்துக்குப் பிறகு மீண்டும் ஏர் இந்தியா அவர்கள் வசம் செல்ல இருக்கிறது.