புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய பொது அடைப்பு மே 24- ஆம் தேதி வரை அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கின்றது. அத்தியாவசிய பொருள்களை மக்கள் இடைவெளி விட்டு வாங்கிச் செல்லும் அளவிற்கு மதியம் 12.00 மணி வரை அந்த கடைகள் இயங்குகின்றன. மக்களுக்கு தினமும் காய்கறி, பழங்கள் உட்பட்ட சத்தான உணவுகள் கரோனா நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை என்பதாலும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு இந்தக் கடைகள் 12.00 மணி வரை திறந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி மக்கள் கூட்டம் கூடாமல் இடைவெளி விட்டு கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி வாங்கிச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பால், மருந்து போன்றவை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி எந்த தடையும் இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான அத்தியாவசியப் பொருள்களை தங்கள் வீட்டிற்கு அருகே உள்ள கடைகளில் வாங்கி அதிக தூரம் சாலையில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
பொதுமக்கள் நலன் கருதியே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் கரோனா தாக்கம் சற்றே குறைய ஆரம்பித்து இருக்கின்றது. இது பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் நடைபெற முடியாது. எனவே பொதுமக்கள் துணையோடு ஏற்கனவே உள்ள நடைமுறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31- ஆம் தேதி வரை தொடரும். நிலைமையைப் பொருத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும். விரிவான அரசாணை வெளியிடப்படும்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.