இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் 18,000 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,53,807 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,08,334ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த நான்கு மாதத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து 18,000 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், மருத்துவப் பணியாளர்களும் பயன்படுத்தும் முகக்கவசம், கையுறை, முழு பாதுகாப்பு கவச உடை போன்றவை பயன்படுத்தப்பட்ட பின்பு கழிவுகளாகக் குவிக்கப்படுகின்றன.
கடந்த ஜூன் மாதம் முதல் மருத்துவக் கழிவுகள் குறித்த தகவல்களை மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வருகின்றன. அதன்படி, ஜூன் மாதம் முதல் கடந்த 4 மாதங்களில் நாடு முழுவதும் 18,006 டன் உயிரி மருத்துவக் கழிவுகள் இந்தியாவில் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நாடு முழுவதும் உள்ள 198 பொது உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்திகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 3,587 டன் உயிரி மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, 1,737 டன் கழிவுகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.