அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, கோத்ராவில் சபர்மதி அதிவிரைவு ரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் ரயிலுக்குள் இருந்த 57 பேர் தீயில் கருகி இறந்தனர். அதில் 14 குழந்தைகள், 27 பெண்கள் அடக்கம். இதனையடுத்து குஜராத் மாநிலத்தில் பெரும் கலவரம் மூண்டது. இக்கலவரத்தில் 790 முஸ்லிம்களும், 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர் என்கிறது அரசு அறிவிப்பு. ஆனால், இந்த கலவரத்தில் பலியானவர்கள் இதைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றனர் சமூக ஆர்வலர்கள்.
இந்தநிலையில், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான ரபிக் பாதுக், சம்பவம் நடந்து 19 வருடங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். ரபிக் பாதுக் மேலும் சிலரோடு சேர்ந்து ரயிலில் பெட்ரோலை ஊற்ற, இன்னொருநபர் தீ வைத்துள்ளார். ரயிலை கொளுத்திய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிறகு, கோத்ராவில் இருந்து தப்பித்து, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் சில காலம் தங்கியிருந்த ரபிக் பாதுக், மீண்டும் குஜராத் திரும்பியுள்ளார்.
குஜராத் திரும்பிய பிறகு, முன்பு வசித்த பகுதியை விட்டுவிட்டு வேறுபகுதியில் வாழத் தொடங்கிய ரபிக் பாதுக், பழங்களை விற்று வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் தற்போது அவர் குஜராத் மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் மூன்று முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டியதுள்ளதாகக் கூறப்படுகிறது.