உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 28 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 700-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 24,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இருந்தாலும் உயிரிழப்பு விகிதம் என்பது இந்தியாவை காட்டிலும் உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி முதலிய நாடுகளில் அதிகம் இருந்து வருகின்றது. இந்தியாவில் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் நிறைவடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியா போன்றே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் இறப்பு விகிதமும், கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதீத எண்ணிக்கையில் இருந்துவரும் நிலையில், இந்தியாவில் அதன் பரவல் என்பது சமூக பரவலுக்கு முந்தைய நிலையிலேயே உள்ளது. இது இந்தியாவில் மட்டும் எப்படி சாத்தியம் என்று குழப்பங்களை வளர்ந்த நாடுகளை சார்ந்த மருத்துவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படும் வகையில் நேற்று தில்லியில் சீன தூதரகத்தில் பேசிய சீன வைரஸ் ஆய்வாளர் வென்தூபே இந்தியர்களுக்கு உடல்பலத்தை விட மன பலம் அதிகம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.