கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆகவும் உள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,870 ஆக உள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பு பணிகளில் முக கவசம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.7,774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள தொகையை 1-4 வருடங்களுக்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.