இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 606லிருந்து 649ஆக அதிகரித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப்போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் இதுவரை 649 பேரை பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியர்கள் 602 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் வாரியாக பார்க்கும்போது, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேருக்கும், கேரளாவில் 118 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 43 பேர் குணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.