
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 15 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 32 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தமட்டில் மஹாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3,980 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 3,29,113 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த சனிக்கிழமை 4 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு, கடந்த மூன்று நாட்களாக படிப்படியாக குறைந்து வந்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் கரோனா பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் தற்போது உச்சபட்ச எண்ணிக்கையில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து மாநிலங்களும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டால்தான் கரோனா தொற்றின் அளவு குறையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.