
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஏர்செல் பங்குகள் மலேசியாவிலுள்ள மேக்சிஸ் நிறுவனத்தில் விற்கப்பட்டதில் முறைகேடுகள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.
மேலும் இந்த வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் முன்ஜாமீன் வேண்டுமென டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த விசாரணையில் கடந்த ஜூலை 10-ஆம் தேதிவரை அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்திது வழக்கு விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதனை அடுத்து கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடந்த விசாரணையில் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்ட் 7 -ஆம் தேதிவரை தடை விதித்துள்ளது. மேலும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தையும் கைது செய்ய தடைவிதித்து உத்தரவிட்டது பாட்டியாலா நீதிமன்றம்.
இந்நிலையில், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்குவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், அக்டோபர் 8-ம் தேதி வரை ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.