கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தங்கி இருக்கும் வீட்டையோ அல்லது இடத்தையோ காலி செய்ய நெருக்கடி தரும் கட்டிட உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 9 பேர் இதனால் பலியாகியுள்ளனர். இந்த வைரசைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 15 வரையிலான அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் மற்றொருபுறம் மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் இரவு பகலாக கரோனாவுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மருத்துவர்கள், வாடகை வீட்டில் குடியிருந்தாலோ அல்லது வாடகை இடத்தில் மருத்துவமனை நடத்தி வந்தாலோ, அங்கிருந்து உடனடியாக காலி செய்யக் கோரி உரிமையாளர்கள் நெருக்கடி தருவதாக மருத்துவர்கள் சார்பில் மத்திய அரசுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தங்கி இருக்கும் வீட்டையோ அல்லது வாடகை இடத்தில் இயங்கும் மருத்துவமனையையோ காலி செய்ய நெருக்கடி தரும் கட்டிட உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டல துணை ஆணையர்களுக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.