இந்தியக் கடற்படை வீரர்கள் 21 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள மேற்கு கடற்படை பிரிவில் பணியாற்றும் இவர்கள் அனைவரும் கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள மேற்கு கடற்படை பிரிவில் பணியாற்றும் இந்தியக் கடற்படை வீரர்கள் 21 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இந்தியக் கடற்படை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிக்கப்பட்ட 21 பேரும் ஐஎன்எஸ் ஆங்கரே கப்பலில் பணியாற்றுபவர்கள். இவர்கள் அனைவரும் கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தில் ஏற்கனவே எட்டு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தற்போது கடற்படையிலும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.