இந்தியாவில் கரோனா பாதிப்பால் மரணமடைந்தவர்களில் 70 சதவிகிதம் பேர் ஆண்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், இன்று உலகெங்கும் பரவி பெருமளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் விரிவாகப் பேசுகையில், "இந்தியாவில் பலி எண்ணிக்கை 1.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில், அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது. கரோனா வைரஸுக்கு பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உயிரிழந்தவர்களில் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு சதவீதம் பேர் ஆவர். 60 வயதுக்குட்பட்டவர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் புறக்கணிக்கக் கூடாது. அவற்றை முறையாகக் கடைப்பிடித்தால்தான் கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பிற நோய்ப் பாதிப்பு இல்லாமல் கரோனாவால் பலியானர்வர்கள் எண்ணிக்கை 1.5 சதவீதமாகப் பதிவாகியுள்ளது" எனப் பேசினார்.