இந்தியாவில் கரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 89,129 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு, ஒரே நாளில் இத்தனை பேருக்கு கரோனா உறுதிசெய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 714 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, கரோனாவால் உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இந்தியாவிலேயே மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் உறுதியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (02.04.2021) ஒரே நாளில் 47,827 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் ஓரே நாளில் பதிவான அதிகபட்ச கரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
இந்தநிலையில், மஹாராஷ்ட்ராவில் கரோனா அதிகரித்து வருவது குறித்து மக்களிடம் உரையாற்றிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே, ஊரடங்கு குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்போவதாக கூறியுள்ளார். மேலும் விரைவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.