ஜூன் மாத தொடக்கத்திலிருந்தே புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று புதுச்சேரியை சேர்ந்த 42 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. இதில் 417 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 262 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் மாநிலத்தில் இதுவரை 11 நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில்,
“புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், என்னுடைய வீடு, அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை. இருந்தபோதிலும் சுகாதாரத்துறை என்னை 5 நாட்கள் தனிமைப்படுத்த கூறியுள்ளனர். மேலும் கிராமப்பகுதிகளில் நடமாடும் பரிசோதனை மையம் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் அதிகமாக பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கண்டறிவது அதிகரிக்கப்படும்.
முக கவசம் தயாரிக்கும் நிறுவனத்தால் தற்போது கூனிச்சம்பட்டு பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. அவர்களுக்கு தேவையான பரிசோதனை, தடுப்பு மருந்துகள் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து சிலர் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்கின்றனர். இதனால் பலருக்கும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் மக்கள் மத்தியில் தற்போது கரோனா நோய் குறித்த விழிப்புணர்வு வந்துள்ளது. கரோனா நோய் தொற்று தற்போது உச்ச நிலையை எட்டியுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் நிலை அறிந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுச்சேரி காவல்துறை தற்போது வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்து விசாரிக்க வேண்டும். அதனை விட்டு,விட்டு ஆவணங்களை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. மக்கள் தங்கள் ஜீவாதாரத்தை தேடும் வேளையில், அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 500 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் உள்ளதா என அறிந்து அத்தியாவசிய பொருட்களை கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகளை அனைத்து மக்களுக்கும் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.