காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் காவலர்கள் காவி துண்டு அணிந்திருந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கும் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்குருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து பிரச்சாரங்கள் அங்கு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் காவல்துறையினர் உடையில் இருந்தவர்கள் காவி துண்டு அணிந்திருந்தது சர்ச்சையானது.
மேலும் அந்த கூட்டத்தில் சிலர் திடீரென காவி கொடிகளையும் பிடித்தனர். இது சர்ச்சையான நிலையில் இது குறித்து காவல்துறையினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து கோரிய காவல்துறை உயரதிகாரிகள், “காவி துண்டு அணிந்தவர்கள் போலீஸார் கிடையாது. அவர்கள் கட்சித் தொண்டர்கள்” என்று விளக்கமளித்தார். ஆனால் அந்த வீடியோவில் காவல்துறை சீருடை அணிந்திருந்தவர்கள் கூறும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காவி துண்டு அணிய சொன்னார்கள் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் அந்த கூட்டத்தில் பங்கேற்றது உண்மையான காவலர்களா அல்லது போலியானவர்களா என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அங்கிருந்தவர்கள் போலீசார் இல்லை எனில் அந்த கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டதை அங்கிருந்த உண்மையான காவல்துறை அதிகாரிகள் ஏன் அவர்களை கண்டுகொள்ளவில்லை என பல கேள்விகள் சமூகவலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.