மேற்கு வங்கம் மாநிலம், மெட்ரோ டெய்ரி நிறுவனத்தின் பங்குகளை அம்மாநில அரசு தனியார் நிறுவனத்துக்கு விற்றதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் புகாரை கையில் எடுத்து மேற்குவங்க காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கொல்கத்தாவில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க அரசிடம் இருந்து பங்குகள் வாங்கிய தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், வழக்கறிஞருமான ப. சிதம்பரம், கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராகினார். காங்கிரஸ் எதிர்தரப்பில் உள்ள நிலையில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகவும் காங்கிரஸ் வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் அவர் கொல்கத்தா நீதிமன்றத்தில் வாதாடினார்.
இதற்கு மேற்குவங்க மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
முன்னதாக, நீதிமன்றத்தில் வந்திருந்த போது, அவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சூழ்ந்து கொண்டனர். இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது என அவரை மறித்தனர். மேலும், அவரைச் சூழ்ந்து கருப்பு ரிப்பன் காட்டியதோடு, அவரை திரும்பி செல்ல வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவருக்கு, அக்கட்சியினரே கருப்பு கொடி காட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.