கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி. கர்நாடக அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இந்தநிலையில், அவர் ஒரு அடையாளம் தெரியாத பெண்ணோடு தனிமையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில கன்னட தொலைக்காட்சிகள் இந்த வீடியோவை ஒளிபரப்பிய நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, வேலை தருவதாக கூறி, அந்தப் பெண்ணை ஏமாற்றிவிட்டதாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர், ‘ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் குறும்படம் தயாரிக்க அமைச்சரை அணுகியபோது, கர்நாடக பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை தருவதாக உறுதியளித்து, அமைச்சர் அவரை பாலியல் ரீதியாக ஏமாற்றினார். அந்தப் பெண்ணிடம் ‘சிடி’ (ஆட்சேபிக்கத்தக்க வீடியோக்கள்) இருப்பதை அவர் அறிந்ததும், அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்துகிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் புகாரில், ‘நான் சமூக செயல்பாட்டாளராக இருப்பதால், அவர்கள் இதுகுறித்த புகாரோடு என்னை அணுகினர். தயவுசெய்து இந்த விஷயத்தின் உண்மைத் தன்மையை விசாரித்து, அமைச்சர் மீது கிரிமினல் வழக்குப் பதிவுசெய்து, பாதிக்கப்பட்டவருக்குப் பாதுகாப்பு வழங்கவும்’ எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் மீதான புகார், கர்நாடக பாஜகவுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. புகாரில் சிக்கிய அமைச்சர், பதவி நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.