மண்டி முறையை ஒழிப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, "கரோனா வந்ததும் சென்றுவிடும் என்று அரசு கூறியது, ஆனால், அதற்குப் பின் எவ்வளவோ பிரச்சனைகள் ஏற்பட்டன. உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் பேசுவதாக பிரதமர் கூறினார். ஆனால், வேளாண் சட்ட அம்சங்கள் பற்றி தான் பேசுகிறேன். விவசாயிகள் பலரை அரசு பலி கொடுத்துவிட்டது. மண்டி முறையை ஒழிப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
விவசாயிகள், வியாபாரிகள் தொழிலாளர்களை நசுக்கும் சட்டங்களை அரசு அமல்படுத்துகிறது. வேளாண் சட்டங்கள் பெரும் தொழிலதிபர்கள் பழங்கள், காய்கறிகளை அதிகளவில் இருப்பு வைக்க வழிவகுத்துவிடும். வேளாண் சட்டங்களால் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் முடிவுக்கு வந்துவிடும். தானியங்கள், காய்கறிகளை வைக்கும் பெரும்பாலான கிடங்குகள் அம்பானி, அதானி வசம் உள்ளன. 'நாம் இருவர் நமக்கு இருவர்' என மத்திய அரசு ஆட்சி நடத்திவருகிறது. இது விவசாயிகளின் போராட்டம் அல்ல; இது தேசத்தின் போராட்டம். வேளாண் சட்டங்களால் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்" என்றார்.
இதனிடையே, வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்களவையில் ராகுல்காந்தி பேசிய போது, பா.ஜ.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.