தெலுங்கானா மாநிலத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க இருப்பதாக சில நாட்கள் முன்பு மாநில அரசு அறிவித்து இருந்தது. குறிப்பாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இல்லாமல் அவை நடவடிக்கை நேரடியாகத் தொடங்கும் என்று அம்மாநில சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் தமிழிசை கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " 5 மாதம் இடைவெளிக்குப் பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. எனவே அதை புதிய கூட்டத்தொடராகத்தான் கருத வேண்டும். ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையின்றி நடத்துவது என்பது மரபை மீறிய செயல்" என்று ஆளுநர் தமிழிசை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் உரை இடம் பெறாததால் முந்தைய ஆண்டில் அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கக் கூடிய வாய்ப்பை சட்டப்பேரவை உறுப்பினர்கள் இழந்துவிட்டதாகவும் தன்னுடைய அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். தெலுங்கானா அரசு தரப்பிலோ, "இந்த கூட்டம் இதற்கு முந்தைய கூட்டத்தொடரின் தொடர்ச்சி தான், எனவே இதற்கு ஆளுநர் உரை தேவையில்லை" என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.