கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன.இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது.
காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் 117 இடங்களிலும், பாஜக 76 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 27 இடங்களிலும், மற்றவை நான்கு இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பெங்களூர் நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. கல்யாண் கர்நாடகா, கிட்டூர் கர்நாடகா, மத்திய கர்நாடகா, பழைய மைசூர் பகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வைத்து வருகிறது.
அண்மையில் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஸ் ஷட்டர் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 45.4 சதவீதமும், பாஜக 38.2 சதவிகிதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன. கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிக்காவன் தொகுதியில் முன்னிலையில் உள்ளார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் முன்னிலையில் உள்ளார். முன்னாள் முதல்வரும் சட்டமன்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி சென்னபட்ணா தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.