மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில் இரண்டு கட்டமாகவும், 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், நவம்பர் 23ஆம் தேதியன்று எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது. இந்த கூட்டணி கட்சிகளை எதிர்த்து பா.ஜ.க, ஏ.ஜே.எஸ்.யூ, ஐக்கிய ஜனதா தளம், எல்.ஜே.பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் களமிறங்குகிறது. அதே போல், மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
இந்த இரு மாநில தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து பல்வேறு கட்டமாக வாக்குகளை சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளதாவது, “தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமரின் பேச்சு மிக வேகமாக சரிந்து வருகிறது. மக்களவைத் தேர்தலில், தோல்வி பயத்தில், சமூகங்களுக்கு இடையே விஷத்தை கக்கி, சமூகத்தை பிளவுபடுத்த முற்பட்டார். மக்களவைத் தேர்தலில் எருமை மாடு, ஆட்டிறைச்சி, மீன், தாலி, முஸ்லீம் என வார்த்தைகளை பயன்படுத்தி எதிர்கட்சிகளை விமர்சனம் செய்தார். போதிய ஓட்டுகள் கிடைக்காமல், இன்று அவர்கள் கூட்டணி ஆட்சியை நடத்துகிறார்கள். இந்தியா கூட்டணி, உங்கள் மகள்களையும் தாலியையும் எடுத்துச் செல்வார்கள் என்று அவர் கூறினார். இப்போது கூட்டணியில் அரசாங்கத்தை நடத்துகிறார்.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜகவின் வாய்ப்புகள் இன்னும் மோசமாக இருக்கிறது. அவர்கள் தோற்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் தனது பேச்சுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பேச்சுகள் மற்றும் உரையாடல்கள் பிரதமர் பதவிக்கு பொருந்தாது. இந்தி திரைப்படத்தின் சி-கிரேடு மலிவான வில்லன் போல பிரதமர் தரம் தாழ்ந்து பேசக்கூடாது. உங்கள் பேச்சுகளை நீங்கள் மேம்படுத்த வேண்டும். அவர், தனிப்பட்ட மரியாதையை இழந்துவிட்டார். குறைந்தபட்சம் நீங்கள் வகிக்கும் பதவிக்கு மீதமுள்ள காலத்தில் மரியாதையையும் புகழையும் தேடி தரும் வகையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.