இந்தியாவின் 18 வது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 19 ஆம் தேதி முதற்கட்டமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு மூன்று கட்டங்களை நிறைவு செய்துள்ளது. அடுத்தகட்டமாக நான்காம் கட்ட வாக்குப்பதிவு வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே பாஜக தலைமையிலான என்.டி.ஏ அணியும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா அணியும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகிறது. 29 தொகுதிகள் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் 21 தொகுதிகளுக்கும் முதல் 3 கட்டங்களாக வாக்குப்பதி நடைபெற்ற நிலையில் மீதமுள்ள 8 தொகுதிகளுக்கு வரும் 13 ஆம் தேதி 4வது கட்டமாக வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இந்த 8 தொகுதிகளில் இந்தூர் தொகுதியில் உள்ளது. இந்த தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் எம்.பி.சங்கர் லால்வானி மீண்டும் போட்டியிட, இவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி பாம் நிறுத்தப்பட்டார்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அக்சய் காந்தி பாம் கடைசி நாள் அன்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் தன்னை இணைத்துகொண்டார். இது காங்கிரஸ் கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் பாஜக வேட்பாளரை எதிர்த்து வேறு பல வாய்ந்த வேட்பாளர் யாரும் இல்லாததால் இந்தூர் தொகுதியில் எம்.பி.சங்கர் லால்வானி வெற்றி உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினருக்கு வாக்களிக்க விரும்பினால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள் கூறிவருகின்றனர்.