இந்தியாவில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் விஜயதசமி பண்டிகை நேற்று முன்தினம் (12-10-24) கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகள், வேலை செய்யும் நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் என அனைத்தையும் தூய்மைப்படுத்தி அதனை மலரால் அலங்கரித்து இறைவழிபாடு செய்தனர். குறிப்பாக வட மாநிலங்களில், விஜயதசமி தினத்தை ‘தசரா’ என குறிப்பிட்டு கோலாகலமாக கொண்டாடப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவை போல், துர்கா சிலையையும் நீர்நிலைகளில் கரைத்து கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தில் நேற்று துர்கா சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, ஒலிப்பெருக்கியின் இசைக்கப்பட்ட பாடலால் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த மோதலின் போது, இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்தார். மேலும், இந்த வன்முறையினால் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அவர்கள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து, அந்த இடத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இருப்பினும், இன்று காலை மீண்டும் கலவரம் வெடிக்க தொடங்கியுள்ளது. இரு சமூகத்தினரும் கற்களை வீசியும், கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக, 30 பேரை கைது செய்தது மட்டுமல்லாமல், அப்பகுதியில் முழுவதும் ஏராளமான போலீசார் குவிந்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.