திருச்சி, கே சாத்தனூர் மற்றும் உடையான்பட்டி பிரதான சாலை (வார்டு 63) பகுதியில் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலத்தடி வடிகால்(யு.ஜி.டி)திட்டம் காரணமாக சாலையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இது காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கும், விபத்து அபாயங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். அந்த பகுதியில் சாலை சேதம் அடைந்து பெரிய குழிகள், சமநிலை இல்லாத தரை , மற்றும் சேரும் சகதியுமாக உள்ளது. மோசமான நிலை மையால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாகனங்களுக்கு அதிக சேதங்கள் ஏற்படுகின்றன.
தினசரி பயணங்கள் மற்றும் அவசர உதவிகள் தடைப்படுகின்றன. பல மாதங்களாக பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பு தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததைக் கண்டித்து கவிபாரதி நகர் பகுதி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கவி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.