மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர் அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஹேர் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க ஆளுநருக்கு எதிரான பாலியல் வழக்கு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி பஞ்சா கூறுகையில், “இந்த செய்தியைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். பெண்களின் உரிமைகள் குறித்துப் பேசி சந்தேஷ்காலியை அடைந்த அதே ஆளுநர் தற்போது வெட்கக்கேடான சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். ஆளுநர் பதவியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர் ராஜ் பவனில் பணிபுரிபவர் ஆவார். ஆளுநர் இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதை விட வெட்கக்கேடானது வேறு எதுவுமில்லை. இன்று பிரதமர் மேற்கு வங்கத்திற்கு வருகிறார். அப்போது அவர் ராஜ்பவனில் தங்குகிறார்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து மேற்குவங்க ஆளுநர் சி.வி. ஆனந்தபோஸ் விளக்கமளித்துள்ளார். அதில், “வாய்மையே வெல்லும். இந்த ஜோடிக்கப்பட்ட கதைகளுக்கு நான் பயப்பட மாட்டேன். என்னை இழிவுபடுத்தி அதன் மூலம் தேர்தல் ஆதாயம் பெறச் சிலர் விரும்பினால் அவர்களைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். அதே சமயம் மேற்கு வங்காளத்தில் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.