ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சம்மந்தமாக துணை குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த குற்றப்பத்திரிகையில் கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது. வருகின்ற 31ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி இந்த குற்றப்பத்திரிகை குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
இந்நிலையில், சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரம் சார்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் முன் ஜாமின் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தற்போது இந்த மனு மீதான விசாரணை பிற்பகல் நடைபெற்றது. அதில் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.