Skip to main content

சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 இடையே தகவல் தொடர்பு!

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

Communication between Chandrayaan 2 and Chandrayaan 3

 

இந்தியா சார்பில் நிலவை ஆராய சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றுள்ளது.

 

இஸ்ரோவின் தற்போதைய திட்டப்படி ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருக்கிறது. சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரடியாக நேரலையில் பார்ப்பதற்காக 23 ஆம் தேதி மாலை 5 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சி நேரலை செய்யப்படுகிறது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கும் காட்சிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் - 2 ஆர்பிட்டரோடு, சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக தற்போது தகவல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தொடர்பு கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலமாக ரோவரிடம் இருந்து பெறும் தகவல்களை லேண்டர் இஸ்ரோவிற்கு அனுப்பும். சந்திரயான் - 2 திட்டத்தில் லேண்டரை தரையிறக்கும் திட்டம் தோல்வி அடைந்தாலும் கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் - 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

முன்னதாக நிலவின் தென் பகுதியில் சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்க உகந்த இடத்தை தேர்வு செய்வதற்கான இடத்தை லேண்டர் புகைப்படம் எடுத்து வருகிறது. அவ்வாறு கடந்த 19 ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்