Skip to main content

“பொது சிவில் சட்டம் அவசியம்” - பிரதமர் மோடி 

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

“Common Civil Code is a must” - PM Modi

 

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இந்த சட்டமன்றத் தேர்தலையும் வரும் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையும் கவனத்தில் கொண்டு காங்கிரஸ், பாஜக உள்பட அனைத்துக் கட்சிகளும் தீவரமாகச் செயல்பட்டு வருகின்றன. மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக பெரும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை நோக்கி பிரதமர் மோடி தலைமையில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, “பாஜக உலகத்திலேயே மிகப் பெரிய கட்சியாக மாறியதற்கான முக்கிய பங்காக இருந்தது மத்தியப் பிரதேசம் மாநிலம் தான். நாங்கள் மற்றவர்களைப் போல ஏ.சி அறையில் இருந்து கொண்டு உத்தரவு பிறப்பிப்பவர்கள் அல்ல. மக்களோடு மக்களாக கடும் வானிலையிலும் அவர்களோடு சேர்ந்து பணியாற்றுபவர்கள். இந்த நாடு நன்றாக இருந்தால் தான் நாம் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், ஒரு சிலர் தங்களுடைய கட்சி மட்டும் நன்றாக இருந்தால் போதும்  என்று நினைக்கிறார்கள். கட்சி நன்றாக இருப்பதன் மூலம் லஞ்சம், ஊழல் என்று பணத்தை சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள்.

 

அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு வழிவகுக்கும் வகையில் பொது சிவில் சட்டம் அமைந்துள்ளது. உச்சநீதிமன்றமும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், வாக்கு வங்கிக்காக மட்டும் அரசியல் நடத்தும் சில அரசியல்வாதிகள் இந்த பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.அவர்கள் மக்களை தவறான பாதையில் வழிநடத்துவதற்கும், இஸ்லாமிய மக்களைத் தூண்டி விடுவதற்கும் தான் இந்த சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். தங்களைத் தூண்டிவிட்டு அதன் மூலம் ஆதாயம் அடையும் அரசியல்வாதிகள் யார் என்பதை இஸ்லாமிய மக்கள் விரைவில் கண்டு கொள்ள வேண்டும். 

 

ஒரு வீட்டில் இருக்கும் ஒருவருக்கு ஒரு சட்டம், வேறு ஒருவருக்கு ஒரு சட்டம் என்று இருந்தால் அந்த வீட்டை நடத்த முடியுமா? அதே போல், இரண்டு வகையான சட்டங்கள் நாட்டில் இருந்தால் நாட்டை எப்படி சீராக நடத்த முடியும். அரசியல் சட்டத்தில், எல்லாருக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அனைவருக்கும் பொதுவான இந்த பொது சிவில் சட்டம் அவசியமாக உள்ளது. பொது சிவில் சட்டத்தை எதிர்த்ததை போல், சிலர் முத்தலாக் முறையை ஆதரித்தார்கள். அதன் மூலம், இஸ்லாமிய மக்களுக்கு பெரும் அநீதியை இழைக்கிறார்கள்.

 

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் எகிப்து நாட்டில் 80 ஆண்டுகளுக்கு முன்னரே முத்தலாக் முறையை நீக்கினார்கள். பாகிஸ்தான், கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் இதர நாடுகளில் கூட முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு அங்கமாக முத்தலாக் இருந்தால் அதை ஏன் அவர்கள் தடை செய்ய வேண்டும். முத்தலாக் முறை அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் அநீதியை இழைப்பதோடு மட்டுமல்லாமல் அனைத்து இஸ்லாமிய குடும்பமும் இதனால் சீரழிகிறது.

 

சமீப காலமாக ‘உத்தரவாதம்’ என்ற சொல் பிரபலமாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் கூறும் உத்தரவாதம் ஊழலுக்கு மட்டும் தான் உத்தரவாதம் கொடுப்பார்கள். ஆனால், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்