Skip to main content

தெலுங்கானாவிலும் பிள்ளைக் கடத்தல் வதந்தி! - திருநங்கை படுகொலை

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளைக் கடத்துபவர்கள் எனக் கருதி, வடமாநிலத்தவர்கள், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், திருநங்கை ஒருவர் என பலர் மோசமாக தாக்கப்பட்டனர். 
 

andhra

 

திருவண்ணாமலையில் சாமி வழிபாட்டுக்காக சென்றவர்களை இதே காரணத்திற்காக தாக்கியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவங்களுக்குக் காரணமாக இருந்தது வாட்ஸ் அப் மூலமாக வைரலான வதந்திகள் தான். 
 

போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இந்தத் தாக்குதல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது அந்த வதந்தி தெலுங்கானாவை நோக்கி விரைந்திருந்திருக்கிறது. அங்கு பரவிய சில நாட்களிலேயே திருநங்கை ஒருவரின் உயிரையும் குடித்திருக்கிறது. 
 

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு சந்திரயன்குட்டா என்ற பகுதிக்கு நிதி திரட்ட திருநங்கைகள் கூட்டமாக சென்றுள்ளனர். அங்கு வாட்ஸ் அப் வதந்தியைக் காரணமாகக் காட்டி ஒருவர் கூச்சலிட, கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூட வந்திருந்த திருநங்கைகளைத் தாக்கத் தொடங்கினர். இந்தத் தாக்குதலில் சந்திரையா (51) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் தொடர்புடைய 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்டமாக பரவும் வதந்திகளைத் தடுக்க விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்