Skip to main content

பாஜக எம்.பி. மீது பாலியல் குற்றச்சாட்டு; மீண்டும் தொடங்கிய போராட்டம்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

bjp mp prithvi bhushan sharan singh related incident  again started

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம்  3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அப்போது  சுமுக முடிவு எட்டப்படாததால் போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இது குறித்து பேசிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தங்களது கோரிக்கையை ஏற்று கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

 

மேலும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை  மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து  இந்த குழுவானது விசாரணை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

 

இந்நிலையில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இது குறித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த விவகாரத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் இங்கேயே சாப்பிட்டுவிட்டு உறங்க உள்ளோம். கடந்த மூன்று மாதங்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரை தொடர்புகொள்ள முடியவில்லை. விசாரணை குழுவினரும் முறையாகப் பதில் கூற மறுக்கின்றனர்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்